நிந்தவூரில் இடம்பெற்றுள்ள சம்பவம் கவலையளிப்பதாகவுள்ளது .
இரு வாரங்களுக்கு மேல் அச்சம் பீதிக்குள்ளாக்கப்பட்ட அங்குள்ள மக்களின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார் .

நிந்தவூர் முஸ்லிம் மக்களை விசேட அதிரடிப்படையினருக்கு எதிராகக் கிளர்ந்தெழவைத்துள்ள சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் கருத்து வெளியிடுகையில்

இந் நாட்டில் சிறுபான்மை சமூகங்களை அச்சம் பீதிக்குள்ளாக்கி அவர்களது இயல்பு வாழ்க்கையை முடக்கி அசாதாரண சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று பேரினவாத அரச செயற்பாட்டின் ஒரு அங்கமே நிந்தவூர்ச் சம்பவமாகும் .

ஏற்கனவே கிழக்கில் தமிழ் முஸ்லிம் கிராம மக்களை உலுப்பிய கிறீஸ் மனிதன் பாணியில் நிந்தவூரில் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன .

கடந்த சுமார் இரு வாரகாலமாக இரவு வேளைகளில் இடம்பெற்றுள்ள கிறீஸ் மனிதன் பாணியிலான சம்பவங்கள் அப்பாவி மக்களை அச்சம் பீதிக்குள்ளாக்கி அசாதாரண சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது .

வீடுகளில் இரவுநேரத் திருட்டு வீடுகளுக்குக் கல்லெறிதல் வீட்டுக் கதவுகளைத் தட்டுதல் வீட்டுச்சுற்றாடலில் மறைந்திருந்து தாவி ஓடுதல் போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளன .

எனினும் விழிப்படைந்த மக்கள் கடந்த ஞாயிறு இரவு நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் நடமாடிய சிலரை உடைமாற்றிக் கொண்டிருந்தவேளையில் சுற்றிவளைத்துள்ளனர் .

நீண்டநேரம் குறித்த நபர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தையும் துச்சமெனக் கருதி குறித்த நபர்களை இனங்காண்பதில் நிந்தவூர் மக்கள் துணிச்சலுடன் போராடியுள்ளானர் .

இதன் போது இரு வாகனங்களில் வந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த சந்தேக நபர்களை சம்பவ இடத்திலிருந்து காப்பாற்றிச் சென்றுள்ளனர் .

எம் மக்களை பயம் பீதிக்குள்ளாக்கியவர்கள் எவரென்பதை அவர்கள் இனங் கண்டுள்ளனர் .

நிந்தவூர் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட இத்துயருடன் நாமும் இணைந்து கவலையை வெளிப்படுத்துகின்றோம் .

எமது மண்ணிலிருந்து எம்மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களிலிருந்து குவிக்க ப்பட்டுள்ள படைத்தரப்புக்கள் அகற்றப்பட வேண்டும் .

சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இணைந்து போராட வேண்டிய காலமே இதுவாகும் எனத் தெரிவித்தார் .

கிழக்கு நிருபர்

Post a Comment Blogger

 
Top